Friday, 26 October 2018

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -4

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -4


மூன்றாம் சங்கம்.

கடைச்சங்கம் அல்லது மூன்றாம் தமிழ்ச்சங்கம். கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை
கபாடபுரம் அழிவுற்ற அதேவேளை இடைச்சங்மும் சேர்ந்தே அழிவுற்றது. அழிவுற்ற பாண்டி நாட்டையும் தமிழ் சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டு பண்ணி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைப்பெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. இச்சங்கத்தைப்பற்றி செய்திகள் நமக்கு நிறையக் கிடைத்துள்ளன. கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணம் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே.இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே.



கடைச் சங்கத்தின் சிறப்புகள்
பழைய திருவிளையாற் புராணத்தின் வாயிலாக சங்கப் பலகை என்று ஒன்று இருந்த செய்திகளை அறியமுடிகிறது. மொழியறி சங்கப் பலகை என்றும் பாவறி சங்கப்பலகை என்றும் இருவகை சங்கப்பலகைகள் இருந்ததாக நமக்குத் தெரிவிக்கின்றது. பாடிக்கொண்டிருக்கும் பாடலை சங்க பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். பாண்டிய மன்னன் ஒருவன் கடைச்சங்கத்திலிருந்த நாற்பத்தொன்பது புலவர்களின் உருவங்களை சிலைகளாகச் செய்து நிறுவினானாம். ஒரு சமயம் பொய்யாமொழிப் புலவர் அச்சிலைகள் முன் நின்று பாடினாராம். அவர் பாட்டைக் கேட்டு ரசித்த அப்பதுமைகள் தலையசைத்ததாகப் பழஞ்செய்தி கூறுகின்றது.



கடைச்சங்கத்தின் அழிவு
சிறந்து விளங்கிய கடைச் சங்கமாது பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியின் காலத்திற்குப்பின் நில்லாது மறைந்தொழிந்தது. அவனுப்பின் வந்த பாண்டியர்கள் சங்கம் நிறுவாது, தமிழை வளர்க்காது போயினர். காரணம், அரசியல் குழப்பங்கள் பல நிகழ்ந்தன. களப்பியர்களின் படையெடுப்புகள், பல்லவர்களின் படையெடுப்புக்கள், பாண்டிய நாட்டில் பன்னீராண்டு கடும் பஞ்சம் காரணமாக சங்கப் புலவர்களைப் பாதுகாக்க முடியாமற்போகவே அவர்கள் சேர, சோழ நாடு நோக்கிச் சென்று விட்டனர். இச் சூழ்நிலையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்கம் அழிவுற்றது என இறையனார் அகப்பொருளுரை தெரிவிக்கிறது.

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -3 இரண்டாம் சங்கம்.


தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -3

இரண்டாம் சங்கம்.
இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம். கி.மு. 3000 முதல் 1500 வரை
முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய பாண்டிய மன்னம் கடுங்கோன் என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்ச்கம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு 1500 வரை ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. இச்சங்கத்தில் அவைப் புலவர்களாக தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.
இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியை சுட்டிக் காட்டுகிறது.
இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுனுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. கி.மு. 1500 அளவில் ஏற்பட்ட கடற்கோளானது கபாடபுரம் இருந்த பகுதி முழுவதையும் அழிந்து விட்டது. கடற்கோளால் பாண்டிய நாட்டையும், இரண்டாம் தமிழ்ச் சங்கத்தையும் இழந்ததோடு இடைச்சங்கம் இலக்கியங்களையும் இழக்க நேரிட்டது.


தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -2 முதல் தமிழ் சங்கம்

 தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பகுதி -2

முதல் தமிழ் சங்கம்.


(தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 கி.மு. 3000 வரை.
பழம்பாண்டியமன்னனான காய் சினவழதி என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது.

அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.