Saturday, 13 October 2018

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம் இன்றைய மலர்- வெட்சிப்பூ (இட்லி பூ)

தினம் ஒரு மலர் ஐந்தாம் தமிழ் சங்கம் இன்றைய மலர்- வெட்சிப்பூ (இட்லி பூ) 


தாவரவியல் :

வெட்சி (இட்லிப் பூ அல்லது இட்லி பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள்காணப்படுகின்றன குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது

வரலாறு
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று இந்த வெட்சிப்பூ. தமிழ் கடவுளான முருகனை வழிபடுவோர் இப்பூவினை அணிந்துகொள்வர்.

பழந்தமிழ் மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்வர். போர் தொடங்கவுள்ளதால் ஆவும் (பசு), பசுக்களை வளர்க்கும் அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், முதியவர்களும், குழந்தைகளும், அவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுமாறு அறிவிப்பு விடுப்பர்.

இந்த அறிவிப்பை ஆநிரைகள் (பசுக்கள்) அறியாது மேலும் தமிழ்ப்பழங்குடிகள் ஆநிரைகளை செல்வமாகக் கருதினர். ஆதலால் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து விடுவர். அப்போது அவ்வீரர்கள் வெட்சிப்பூ அணிந்திருப்பர்

குறிப்புகள்:
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.

இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
இது ஊசி போல் அரும்பு விடும்.

வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ.

செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.

குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.

வெண்ணிற வெட்சி

வெட்சி மலர் வெள்ளை நிறத்தில் ஊசிபோல் பூக்கும். அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்.

செந்நிற வெட்சி

முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது.

காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும்.
வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.
வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.

ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து


மருத்துவ பயன்



சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை  நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.  வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. 
ஒரு பாத்திரத்தில் தேங்காய்எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை  சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை  இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.


No comments:

Post a Comment