Friday, 5 October 2018

நாயன்மார் வரலாறு -1 அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார்




பெயர் : அதிபத்த நாயனார்
குலம் : பரதவர்
பூசை நாள் :ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம் :திருநாகை
முக்தித் தலம் :திருநாகை

வரலாறு:

சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.

சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார்.

மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.
இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள்.

அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார்.

அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.



தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா






ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில்நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது

No comments:

Post a Comment