Wednesday 25 March 2015

திருக்குறளுக்காக எட்டாம் வகுப்பு சிறுவன் உண்ணாவிரதம்! இந்த சிறுவனை பாராட்டாமல் இருக்க முடியாது !!

திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தனது பெயரையே ‘குறள்மகன்’ என்று மாற்றிக்கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை சத்தமின்றி செய்துவருகிறார் சுபாஷ் சந்திர போஸ்.
அவரது தொடர்ந்த பிரசாரத்தின் வழியில் ஜனவரி நான்காம் தேதி திருவாரூர் தொடர் வண்டி நிலையம் அருகில், காலை முதல் மாலை வரை திருக்குறள் பரப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தான் இந்த சிறுவன்
”மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை அனைவரும் தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, ‘இல்லம் தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன் என்கிறவர், திருக்குறள் விழிப்பு உணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்.
”மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை அனைவரும் தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, ‘இல்லம் தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன் என்கிறவர், திருக்குறள் விழிப்பு உணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்.
சரி இப்பொழுது ஜனவரி நான்காம் நாளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? என கேட்க குறள்மகனோ, “இன்றிலிருந்து தொடங்கினால்தான் வள்ளுவர் பிறந்த நாளுக்குள்ளாக மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எல்லாரும் தினமும் ஒரு குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் இந்த உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம்” என்கிறார்.
உண்ணாவிரதம் இருந்த குறள்மகனை பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா வாழ்த்தினார். மாலை ஆறு மணியளவில் மதிமுக மாவட்ட பொறுப்பில் இருக்கக்கூடிய கூடூர் சீனிவாசன் குறள் மகன் நடத்திய உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
மக்கள் திருக்குறளை படிப்பதோடு விட்டுவிடாமல் அதன் வழி நடந்தால் நாடு விரைவில் முன்னேறும் என்பது திண்ணமே.
நன்றி
த.க.தமிழ் பாரதன்

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!

நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி.

அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் என பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன்.
வெ.ராமசுப்பிரமணியன் சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழா வுக்கு தலைமையேற்க வந்திருந்தார். புதுக்கோட்டை செல்கிறோம்... இந்தப் பயணத்தில் ஒருவரைச்சந் திக்க வேண்டும் என ஆசைப்படுகிறது நீதியரசரின் தமிழ் மனசு. அவரைப் பற்றி பல மேடைகளில் பேசி இருக்கிறார். பல இடங்களில் மேற்கோள்காட்டி இருக்கிறார். பலரிடமும் வியந்து வியந்து பாராட்டி இருக்கிறார். ஆனால் அவருடன் கடிதவழித் தொடர்பு மட்டுமே. நேரடியாகச் சந்தித்ததில்லை.
பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் தேர்வு செய்வார். இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த காலகட்டத்தில் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு நிக ரான தமிழ் வார்த்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். இந்தப் பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட நீதியரசருக்கு ஆசை. தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவி யாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
காலை 8 மணி. 55-60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். நீதியரசர் அவர்கள், “ தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்த னையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடு தேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....
ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா? பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.
( அந்த 47 வார்த்தைகள்...
(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.
மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்)
“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.
“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி.
தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.
பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.
பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!
(மன்னிக்கவும் அந்த அம்மையாரின் புகைப்படம் கிடைக்கவில்லை ! புதுக்கோட்டை அருகே புதுப்பட்டி கிராமத்தை சார்ந்த நண்பர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் முடிந்தால் புகைப்படம் பிடித்து இங்கு பகிரவும்)
- பழ. அசோக்குமார் ( கூடல் நகர் )
நன்றி @ஆனந்த விகடன்