Monday 18 September 2017

கட்சித் தாவல் தடைச் சட்டம்

சுதந்திர இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் 1951ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தற்சமயம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ற பிரிவு ஒன்று இல்லை. இந்தச் சட்டம், 1985ஆம் ஆண்டுவரை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத்திலும் பல்வேறு மாநில சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டப் பேரவை உறுப்பினர்களோ பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் சாதாரணமாக சபை நடந்துகொண்டிருக்கும்போதே ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சித் தரப்புக்கும், எதிர்க்கட்சியில் இருந்து ஆளும்கட்சித் தரப்புக்கும் மாறிமாறி சென்ற வரலாறு பல உண்டு. தமிழகத்திலும் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திமுக உறுப்பினர் ப.உ.சண்முகம் சட்டமன்றத்தில் கட்சி மாறிய சம்பவம் நிகழ்ந்ததுண்டு. அதுபோல, புதுச்சேரி மாநிலத்திலும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அணி மாறிய நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்ந்ததுண்டு.

இப்படி, அணி மாறும் உறுப்பினர்கள் பதவியைப் பறிக்க சட்டத்தில் ஏதும் இடமில்லாமல் இருந்ததால், இது ஜனநாயக நடைமுறைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்தது. இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு, 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 534 தொகுதிகளில் 401 தொகுதிகள் வெற்றிபெற்று ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றிருந்தார். இளம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தும்வகையில் 1985ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஷரத்துகள் 101, 102, 109 மற்றும் 190களில் உள்ள சாராம்சங்களின் அடிப்படையில் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். அதையே ஒரு சட்டமாக மாற்றினார். அதாவது, கட்சித் தாவல் சட்டம் என்று தனியாக, புதிதாக இயற்றப்படுவதற்குப் பதிலாக, இதை இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாகவே உருவாக்கி, இந்தச் சட்டத்துக்கு ஒரு முக்கியத்துவத்தையும் உருவாக்கினார். இந்த அரசியலமைப்பு சட்டமானது, 52வது சட்டத் திருத்தம் என்று அழைக்கப்படுகிறது. அதில் புதிய விஷயமென்னவென்றால், இந்த 52 வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒரு பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கும்வகையில், இந்திய அரசியலமைப்பில் 10வது சட்ட அட்டவணை ஒன்றையும் புதிதாக உருவாக்கி, இந்தச் சட்டத்தை நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் வராமல் இருக்கும்படி உருவாக்கினார். பின்பு ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த பாதுகாப்பு அம்சம் மட்டும் தவறு என ஆணையிட்டு, இந்த சட்டத் திருத்தத்தின்கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது.
இதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று வெளிப்படையான பெயர் எதுவும் இல்லை. ஆனால் இந்த 52வது சட்டத் திருத்தமுறையையும், அதை உள்ளடக்கிய 10வது சட்ட அட்டவணையையும்தான் நாம் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்கிறோம். இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகினால், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கமாட்டார்கள். அப்படியில்லாமல், அந்தக் கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக விலகினாலோ, அக்கட்சியின் மன்ற கொறடா ஆணையை ஏற்று, மன்றத்தில் செயல்பட மறுத்தாலோ அல்லது அக்கட்சியின் மன்ற கொறடாவின் ஆணையை ஏற்காமல், மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் இருந்தாலோ, எதிர்த்துச் செயல்பட்டாலோ அந்த மன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்கீழ் மன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும். இதில் சபாநாயகர் தீர்ப்பே இறுதியானதாகும். இதில் சபாநாயகரோ, துணை சபாநாயகரோ தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடாவின் ஆணையை மன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கக் கூடாது என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால் இப்படி சபாநாயகரோ, துணை சபாநாயகரோ, கொறடா ஆணைக்கு மாறாக நடந்தால், சபையின் மொத்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்து அதை அவர்களுக்கு எதிராக நிறைவேற்றினால், சபாநாயகர்களும் இந்த சட்டத் திருத்தத்தின்கீழ் பதவியிழக்க வேண்டும்.


இதன்பிறகு, இந்தியாவில் இப்படி மன்ற உறுப்பினர்கள் தங்கள் வசதிக்கு கட்சிக்கு எதிராக வாக்களித்து, தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்துக்கு/முடிவுக்கு எதிராக தனித்தனியாக சுயேட்சையாகவும் சுயநலத்துடனும் கட்சி தாவும் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துபோனது. 1997ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிஜேபி-யும் மாயாவதியும் அதாவது, உயர்சாதி கட்சியும் ஒடுக்கப்பட்ட மக்கள் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டணி அமைத்து, இருவரும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். இதனால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பி.ஜே.பி.,யின் கல்யாண் சிங் முதலில் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆனால் ஒரு வருடத்துக்குள் மாயாவதி கட்சி மன்ற உறுப்பினர்களில் ஒரு பங்கு உறுப்பினர்களான 29 எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டுவரும் இந்திய அரசியலமைப்பு 10ஆவது சட்ட அட்டவணை திருத்தத்தின்கீழ் அவர்கள் உறுப்பினர் பதவியைக் காப்பாற்றி, தனது இரண்டரை ஆண்டுகாலம் ஒப்பந்தத்தை முறியடித்து, தொடர்ந்து தானே 5 ஆண்டுகாலம் ஆட்சிபுரிய, மாயாவதி கட்சியில் இருந்து முதல் 22 நபர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். அதில் ஆளுநருக்கு அளித்த பட்டியலில் 29 மன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். முதலில் வந்த 22 நபர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தனர்.
இதுகுறித்து மாயாவதி, சபாநாயகருக்கு மனு செய்ததில் அவர், கட்சித் தாவல் நடைபெறவில்லை எனக் கூற, அதை எதிர்த்து மாயாவதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தத்தின் மீது எழுப்பப்படும் முதல் வழக்காகும். இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து வெகுதீர விசாரித்தது. தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் எம்.சீனிவாசன் எழுதிய தீர்ப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.


தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகளுக்கு இந்தத் தீர்ப்பு மிக முக்கிய ஒரு பாடத்தைத் தரும்.


No comments:

Post a Comment