Wednesday 18 June 2014

ஒப்பாரி பாடல்கள்

ஒப்பாரி பாடல்கள்


ஏறக்குறைய இன்றைய காலகட்டத்தில் 98 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். கிராமங்களில் வயதான ஒருவர் இறந்து விட்டால் என்றால் அவரை ஒப்பாரி பாட்ல் பாடி அவரது சாதனைகள் வேதனகளைச்சொல்லிதான் அனுப்பிவைப்பார்கள்.

மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு;கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.

ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்று ஆனால் அது இன்றல்ல. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தான் தாலட்டும், ஒப்பாரி பாடல்களும். மனிதனின் தொடக்க காலத்தில் பாடுவது தாலட்டு, அவன் வாழ்க்கை முடிந்து போகையில் பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும். தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.
நான் அறிந்தவரையில் எங்க ஊரில் பொன்னாத்தாள் என்ற ஒரு பாட்டி இருந்தார்கள் யாராவது வீட்டில் இறந்து விட்டார்கள் எனில் பொன்னாத்தாவை தான் கூப்பிடுவார்கள். வயதான வாழ்ந்து அனுபவித்த ஒருவர் இறந்து விட்டர் எனில் அங்கு ஒப்பாரி ரொம்ப பலமாக இருக்கும். அந்த வீடுகளில் ரேடியோ கட்டி ஒருநாள் முழுக்க பொன்னாத்தாள் மைக்பிடித்து ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பிக்கும். அப்படி பாடும் போது அவரின் அருமை பெருமைகள் அனைத்தும் அப்பாடல்களில் வரும். ஆனால் இன்று கால வேகத்தில் ஒப்பாரி என்னும் கிராமியபாடல்களே அழிந்து விட்டது என்றே கூறலாம்.
நான் படித்த சில ஒப்பாரி பாடல்கள்....

இறந்தவர்களின் உறவு முறை அடிப்படையில் ஆரம்பிக்கும் முதல் வரி....

என்னை ஆளவந்த ராசாவே -மனைவிஎன்னப் பெத்த சீதேவியே- மகள்என்ர மகளே- தாய்என்ர மகனே- தாய்என்ர பிறவியரே- சகோதரி நான் பெறாமகனே-பெரியதாய் அல்லது சிறியதாய்



இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் #ஒப்பாரி 


பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ 

பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதற்கான பாடல்....

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன
 


முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு
நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே



தந்தைக்கும், கணவனுக்கும் பொறுந்தக்கூடிய பாடல்....

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ
மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு. 


என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன்


மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல்...

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு 
உன்னைகட்டைக்கோ அனுப்புகிறேன்....



இறந்தவர் வீட்டுக்கு இரண்டு நாள் கழித்து துக்கம் விசாரிக்க வருபவருக்கான பாடல்...


“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு
ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்” 

இப்படி பல வகையான பாடல்கள் நம் சமூகத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற ஒப்பாரி பாடல்கள் ஆகும். ஆனால் இன்று இவைகள் அழிந்துவிட்டன என்கிற போது வருத்தப்பட வேண்டி உள்ளது...

No comments:

Post a Comment